முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தை
விரும்பி சுவைத்து உண்ண விரும்பாதவர் இவ்வுலகில் உளரோ என்று கேட்டால் அதற்கு இல்லை
என்று தான் பதில் கூற வேண்டும். அந்த அளவிற்கு அனைவரையும் சுண்டி இழுப்பது மாம்பழம்
ஆகும். இப்படி அனைத்து தரப்பினராலும் விரும்பி சுவைக்கப்படும் மாம்பழ சீசன் தற்போது
களைகட்டத் தொடங்கியுள்ளது. அதிலும் சேலம் மாம்பழம் என்றால் தனிச் சிறப்பு தான்…………
சேலம் மாம்பழம் குறித்து சுவாரசியமான செய்தித் தொகுப்பு இதோ உங்களுக்காக………………..
நாவில் நீர் ஊறவைக்கும்
மாம்பழத்தை சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடுகின்றனர். மாம்பழ
சீசன் தொடங்கிவிட்டாலே அனைவரும் போட்டா போட்டி
போட்டுக் கொண்டு மாம்பழங்களை வாங்கிச் சென்று சுவைப்பது வழக்கம். அதிலும் சேலம் மாம்பழம்
என்று கூறினால் அனைவரின் நாவிலும் அதைச் சுவைத்தே ஆக வேண்டும் என்ற ஆசை வந்துவிடும். மல்கோவா , அல்போன்ஸா , செந்தூரம் , வரகம்பாடி ,
குதாதத் , குண்டு , போன்ற பல்வேறு வகையான மாம்பழங்கள் அனைவரின் நாவையும் நடனமாடச் செய்து
கொண்டிருக்கிறது . சேலம் மாம்பழ சீசன் இந்த ஆண்டும் தற்போது களைகட்டத் தொடங்கியுள்ளது.
கிருஷ்ணகிரி , வாழப்பாடி , தருமபுரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விற்பனைக்காக மாம்பழங்கள்
வந்துள்ளன. இதனால் மாம்பழ பிரியர்களுக்கான விருந்து தொடங்கிவிட்டது என்று தான் கூற
வேண்டும்.
இது ஒரு புறமிருக்க மாம்பழ
பிரியர்களுக்கு விருந்தளிக்கும் விவசாயிகளோ விளைச்சல் குறைவாக இருப்பதாக கூறுகின்றனர்.
அதே சமயம் வியாபாரிகள் நேரடியாக தங்களிடமே கொள்முதல் செய்யப்படுவதால் போதிய லாபம் கிடைப்பதாக
விவாசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். விவசாயிகளிடமிருந்து வாங்கிச் சென்று வீதிகளிலும்
, கடைகளிலும் விதவிதமாக வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் வகையில் மாம்பழங்களை மலை
போல் குவித்து வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
சேலத்து மாம்பழத்தை இங்கு
உள்ள பொதுமக்கள் கொல்கத்தா , டெல்லி , மும்பை போன்ற மாநிலங்களில் உள்ள தங்களின் நண்பர்களுக்கும்
உறவினர்களுக்கும் மாம்பழத்தை அனுப்பி வைத்து நட்பையும் உறவையும் புதுப்பித்துக் கொள்வதாகக்
கூறுகின்றனர் இந்த மாம்பழ வாடிக்கையாளர்கள்………
மாதா ஊட்டாத சோறு மாங்காய்
ஊற்றுமாம் என்ற பழமொழிக்கேற்ப மனமும் சுவையும் கொண்ட இந்த சேலத்து மாம்பழம் ஆண்டுதோறும்
உறவுகளுக்கும் நட்புக்கும் பாலமாய் விளங்குகிறது என்று கூறினால் அது மிகையாகாது………….

No comments:
Post a Comment